ஸ்ரீ அகஸ்திய மகரிஷி, கண்ணேறு, சாபம், பாவம், தோஷம் இவைகளுக்கு ஒரு மகாமருந்தே அன்னதானம் – அன்னதர்மம் என்று விவரித்து கூறியுள்ளார். எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி, பிரதிபலன் பாராது செய்யப்படுகின்ற அன்னதானமே அன்னதர்மம் என்பதாகும் – அது மறைமுகமாக நம்மை சார்ந்த தீயவைகளை விரட்டவல்லது.
அன்னதர்மம் பஞ்சபூதேஸ்வரம், நமது ஆலயத்தில அன்னையின் பிரசாதமாக (24x7) எந்நேரமும் வழங்கப்படுகிறது.
யார் எதைக் கொண்டுவருகின்றனர் – யார் சமைக்கின்றனர் – யார் பரிமாறுகின்றனர், என்பதறியாத வண்ணம் அன்னையே நேரிடையாக வழிநடத்தி, அற்புதமாய், அதிசயமாய் தொடர்ந்து நடத்தி வரும் அன்னதர்மம் இந்த ஆலயத்தின் சிறப்பம்சமாகும். ஏழை–பணக்காரன். அதிகாரி-ஊழியன் என்ற அனைத்திற்கும் அப்பாற்பட்டு, அனைவரும் சமமாக பாவிக்கும் பார்வைக்கு வித்திட்டு, அம்பாளை மட்டுமே நினைக்கும்படி செய்து - தன்னை மறந்து அன்னையிடம் லயிக்கும் நிலைக்கு அருள் பாலிக்கிறாள்.
அன்னதானம் – அன்னதர்ம இலக்கணங்களை அம்பாள் உலகமெங்கும் பரப்பிட, ஸ்ரீ மகாபஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் இத்திருக்கோவிலை மைய சக்தி இடமாக கொண்டு மற்ற புனிதமான இடங்களிலும் – ஆவுடையார் கோவில், இடைக்காட்டூர், காரைக்கால், இடையமேலூர், கரூர், சிங்கம்புணரி, அழியாநிலை மற்றும் பல பகுதிகளில் அன்னதர்மம் நடைபெறுகிறது.
அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ, பசியில்லா உலகம் செய்யும் இலக்கணங்கள் இங்கிருந்தே புறப்படட்டும் – என்பது அம்பாளின் கருணையே.